Vatican News
கர்தினால் டர்க்சன் அகுஸ்தினோ ஜேமில்லி மருத்துவமனை சந்திப்பு
உரோம் நகரில் இயங்கும் அகுஸ்தினோ ஜேமில்லி மருத்துவமனையிலுள்ள கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மற்றும், அவர்களுக்குச் சிகிச்சைகள் வழங்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பையும், ஆறுதலையும் கர்தினால் பீட்டர் டர்க்சன் தெரிவித்தார்,
ஏப்ரல் 03 ஆம் தேதி வெள்ளியன்று, மாலையில் ஜேமில்லி மருத்துவமனைக்குச் சென்ற, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், இத்தொற்றுக் கிருமி நோயாளிகளைப் பராமரிப்பதற்குத் தங்களை அர்ப்பணித்துள்ள மருத்துவப் பணியாளர்களைச் சந்தித்து, திருத்தந்தையின் தோழமையுணர்வைத் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் செயலர் பேரருள்திரு செகுந்தோ டீஜாடோ முன்னோஸ், அருள்பணி நிகோலா ரிக்கார்டி ஆகிய இருவருடன், ஜேமில்லி மருத்துவமனைக்குச் சென்ற கர்தினால் டர்க்சன் அவர்கள், ‘இந்த தொற்றுக்கிருமிக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் தனியாய் இல்லை என்றும், திருஅவை உங்களுடன் இருக்கின்றது’ என்றும் கூறினார்.
இச்சந்திப்பின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசிர்வதித்த செபமாலைகளை வழங்கிய கர்தினால் டர்க்சன் அவர்கள், கோவிட்-19 தொற்றுக்கிருமி தாக்கியுள்ள சூழலில், ஜேமில்லி மருத்துவமனை சிறப்பாகப் பணியாற்றி வருவதைப் பாராட்டினார்.
சுவாசக் கருவிகள்
இத்தொற்றுக் கிருமியால் தாக்கப்பட்ட நோயாளிகள் மற்றும், அக்கிருமியால் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு, திருத்தந்தையின் ஆறுதலையும், செபங்களையும் தெரிவித்த கர்தினால், இந்த முக்கியமான சூழலில் மனித உயிர்களைக் காப்பாற்றப் பணியாற்றிவரும் அகுஸ்தினோ ஜேமில்லி மருத்துவமனைக்கு, முப்பது முதல் ஐம்பது சுவாசக் கருவிகளை திருத்தந்தை வழங்கவுள்ளார் என்பதையும் அறிவித்தார்.
Comment